"அடிக்க மட்டும் இல்லை அணைக்கவும் தெரியும்" அன்னலட்சுமியான போலீஸ்
அடிக்க மட்டும் இல்லை அணைக்கவும் தெரியும் என்று தங்களது மனித நேய செயல்பாட்டால் நிரூபித்து வருகின்றனர் சென்னை போலீசார். பசியோடிருப்பவரை தேடிச் சென்று உணவு கொடுக்கும் காவல்துறையின் அன்னலட்சுமிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ஊரடங்கை மீறி வெளியில் வரும் வாகன ஓட்டிகளை அடித்து விரட்டுவது தான் வீரம் என்று கையில் லத்தியுடன் வெறி கொண்டு அலையும் மற்ற மாவட்ட போலீசாருக்கு மத்தியில், நிலைமையின் விபரீதத்தை உணர்த்த சென்னை காவல் ஆணையர் தொடங்கி கடை நிலை காவலர் வரை கையில் லத்தி எடுக்காமல் விதி மீறும் நபர்களுக்கு நல்ல விதமாக புத்தி சொல்லி மற்ற மாவட்ட போலீசாருக்கு முன் மாதிரியாக உள்ளனர்..!
ஊரே வீட்டில் அமர்ந்து பாதுகாப்பாக சாப்பிட்டாலும் உறக்கம் இன்றி மேற்கொள்ளும் காவல் பணியோடு, இல்லாதோருக்கு அன்னம் வழங்கும் மனித நேய பணியையும் சத்தமில்லாமல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஏழைகளுக்கு உதவும் மன நிலையில் உள்ள தொழில் அதிபர்களை தொடர்பு கொண்டு அவர்களை ஒருங்கிணைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபு, துணை ஆணையர் தர்மராஜ், உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி வழிகாடுதலுடன் , தொழில் அதிபர் சக்திவேல் மூலமாக 340 மூட்டை அரிசியை குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும், திருநங்கைகளுக்கும் வழங்கினர்.
கொடுப்பதற்கு மனம் இருக்கும் நபர்கள் மூலம், உதவி தேவைபடுவோரை கண்டறிந்து அவர்களுக்கு பொருட்கள் சென்றடைய பாலமாக இருப்பது கூட மனித நேயம் தான்.
இதற்கு ஒருபடி மேலாக, சென்னை ரயில்வே காவல் துறையில் பணிபுரியும் ஆய்வாளர் சசிரேகா , குக்கருடன் உணவு எடுத்து வந்து வீதியில் உணவின்றி தவித்த ஆதரவற்றோருக்கு வழங்கினார்.
ஒவ்வொரு நபராக தேடிச்சென்று அவர்களின் பசியறிந்து உணவை சாப்பிடக்கொடுத்த காவல்துறை அன்னலட்சுமிகள் பாராட்டுக்குரியவர்கள்.
ஒரு புறம் மனித நேயப் பணிகளால் சென்னை காவல்துறையினர் மக்களின் இதயங்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்க, கையில் லத்தியுடன் சிங்கம் சூர்யா போல வீதியில் சாமி ஆடிக் கொண்டிருந்த வட மாநில போலீஸ் ஒருவரின் பிளாஸ்டிக் லத்தி, அவர் தாக்கிய இரு சக்கர வாகனத்தில் சிக்கிக் கொண்டதால் அதனை மீட்க தெறித்து ஓடிக் கொண்டிருந்தார்..!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு காவல்துறைக்கு மட்டும் அல்ல, தற்போதைய சூழலில் பொதுமக்களுக்கும் அவசியம்..!
பொதுமக்கள் அத்தியாவசியம் தவிர்த்து, அனாவசியமாக வெளியில் சுற்றாமல், அமைதியாக வீட்டிலேயே இருந்தால், தொடர்ந்து மனிதநேயப் பணிகளை மேற்கொள்ள, தங்களுக்கு காலமும் நேரமும் கூடுதலாக கிடைக்கும் என்பதே காவல் துறையின் வேண்டு கோளாக உள்ளது..!
Comments